by Ahila Ruban
தகுதி 1
அதிகாலையில் வேகமாக சமையலை முடித்து வீட்டை சுத்தம்செய்து வேலைக்குப் புறப்படும்போது சோம்பல் முறித்தபடி அங்கே வந்த அம்மா, “இந்த வேலைகளை செய்ய யாரையாவது வைக்கக்கூடாதா?” என்று கூறி என் மன உளைச்சலை அதிக்கப்படுத்தினார். அம்மாவிற்கு எங்கள் நிலமை புரியவில்லை. அவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கம் கொடுத்து நானும் சலித்துவிட்டேன். இப்போது அதற்கு நேரமும் இல்லை.
நான் வேலைபார்க்கும் நிறுவனத்தை வேறு யாரோ வாங்கிவிட்டார்கள் என்றும் புதிய உரிமையாளர் இன்று வரப்போவதாகவும் அறிவித்திருந்தார்கள். அதனால்தான் அதிகாலையிலேயே அலுவலகத்திற்குப் போக நினைத்தேன். இந்த வேலையில்லாமல் என்னால் சமாளிக்கமுடியாது. புதிய உரிமையாளரிடம் நல்ல பெயர் வாங்கிவிடவேண்டும். நான் மன உறுதியுடன் புறப்பட்டேன்.
“எனக்கு ஒரே தலைவலியாக இருக்கிறது டாக்டரிடம் அழைத்துப்போ,” என்றார் அம்மா.
“மாலையில் வேலைமுடிந்ததும் போகலாம்,” என்றேன்.
“எனக்கு உடல் நிலை சரியில்லையென்றால் அழைத்துப்போகக்கூட உன்னால் முடியவில்லையே,” என்ற அம்மாவின் அங்கலாய்ப்பைக் கேட்டபடியே வீதியில் இறங்கினேன். அம்மா எப்போதும் இப்படி இல்லை. நான் வளரும்போது என்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்தவர்தான். அப்பாவின் நிறுவனம் நன்றாக நடந்தபோது எங்கள் வீட்டில் பணத்திற்குக் குறைவில்லை.
வீட்டில் கேட்டதையெல்லாம் செய்ய வேலைக்காரர்கள் இருந்தார்கள். தேவையான இடங்களுக்குச் செல்ல வண்டிகளும் வாகன ஓட்டிகளும் இருந்தார்கள். அம்மாவை அப்பா மகாராணிபோலவே பார்த்துக்கொண்டார். பணத்தின் அருமை புரியாமலே நானும் வளர்ந்தேன். அப்பாவின் நிறுவனம் திவாலானபோது நாங்கள் வாழ்ந்த வீடுமுதல் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவிற்கு வரும் நிலை ஏற்பட்டது.
தான் கஷ்டப்பட்டுக் கட்டியெழுப்பிய எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டோமே என்ற வேதனையில் அப்பா மாரடைப்பில் இறந்துவிட இவற்றை எல்லாம் தாங்கும் சக்தியின்றி அம்மா தன் மனதை இழந்துவிட்டார். அவர் இன்னும் தான் பணக்காரி என்ற கற்பனை உலகில் வாழ நிஜ உலகத்தின் சோதனைகளை நான் தனித்து சுமை தாங்கினேன். இப்போது நான் பார்க்கும் வேலைதான் எனக்கும் அம்மாவிற்கும் உணவும் இருப்பிடமும் கொடுக்கிறது.
அலுவலகத்திற்கு வந்தபோது பரபரப்பாக இருந்தது. என்னைப்போலவே பலர் நேரத்திற்கு முன்பாக வந்து காத்திருந்தார்கள். உரிமையாளர் வந்துவிட்டார் என்று காவலாளி அறிவித்தபோது புடவை சரியாக இருக்கிறதா, தாலைமுடி சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு அவரை வரவேற்கத் தயாராக எழுந்து நின்றேன். மனதில் ஓர் வயோதிபரை எதிர்பார்த்திருந்த நான் அங்கு வந்த இளைஞனைக் கண்டு மனம் வாடினேன்.
ஒரு பாரிய நிறுவனத்தின் முதலாளியாக இல்லாமல் சாதாரண உடையில் ஆடம்பரம் இன்றி வந்தவன் ஒவ்வொருவரின் பெயர்ப் பலகையையும் பார்த்து அவர்கள் பெயர்சொல்லி வணக்கம் கூறினான். அவன் என் முன்னால் வந்து நின்றபோது என் கால்கள் பலமிழந்து நடுங்க ஆரம்பித்தன. என் பெயரைப் பார்த்தவன், “அஷ்வினி தேவமித்ரா, வணக்கம்,” என்றான் புன்னகையுடன். நான் பதில் சொல்லவும் மறந்து உறைந்துபோக அவன் எதுவும் நடவாததுபோல் என்னைத் தாண்டிச் சென்றான்.
“அவன் பெயரும் தேவமித்ராதான், தெரியுமா?,” என்றார்கள் யாரோ. என் மனமோ இனிவரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கப்போகிறேன் என்பதையே சுற்றிவந்தது. வேலையே வேண்டாம் என்று விட்டுப்போகும் நிலையில் நான் இல்லை. இந்த வேலை கிடைப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருந்தது என்பதை மறந்துவிடவில்லை. அவனிடம் மன்னிப்புக் கேட்க மனம் தவித்தது ஆனால் தன்னிடம் பணம் இருப்பதால்தான் அப்படி நடந்துகொள்கிறேன் என்று அவன் நினைக்கக்கூடும். அப்படி அவன் நினைப்பதில் தப்புமில்லை. அப்பாவின் இழப்புடன் என் குடும்பம் ஏழ்மையில் வாடியபோது நான் அவனுக்குச் செய்த அநியாயத்தை உணர ஆரம்பித்தேன். அவனிடம் மன்னிப்புக்கேட்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்று விலகியிருந்தேன்.
“அஷ்வினி, உங்களை ஐயா உள்ளே வரும்படி அழைக்கிறார்,” என்றான் தேவமித்திராவின் உதவியாள். நான் தயக்கத்துடன் அவன் அலுவகத்துக்குள் காலடியெடுத்துவைத்தேன்.
“என்னை வேண்டாம் என்று தூக்கியெறிந்தபின்னும் என் பெயரை மட்டும் வைத்திருக்கிறீர்களே, ஏன்?” என்றான். என்ன பதில் சொல்வது? நான் அவனை இன்னும் நேசிக்கிறேன் என்பேனா? அல்லது என் முட்டாள் தனத்தால் அழகிய கோலம்போல் ஆரம்பித்த எங்கள் வாழ்வை சிதைத்துவிட்டதற்காக வருந்துகிறேன் என்று சொல்வேனா?
“என்னை மன்னித்துவிடுங்கள், என்னை வேலையில் இருந்து நீக்கிவிடாதீர்கள்,” என்றேன். அவன் புருவம் மெதுவாக உயர்ந்தது. முகத்தில் புன்னகை விளையாடியது.
“பிடிக்கவில்லை என்று தூக்கியெறிவது உங்கள் பழக்கம், என்னுடையதில்லை. உங்கள் வேலைக்கு எந்தப் பாதிப்பும் வராது. உங்கள் அம்மாவைக் கேட்டதாகச் சொல்லுங்கள்,” என்றான்.
“அவர்கள் மனம் முன்புபோல் இல்லை. பலவிஷயங்கள் அவர்களுக்கு நினைவில்லை,” என்றேன். இதுவரை என் குடும்பப் பிரச்சனைகளை நான் யாருடனும் பகிர்ந்துகொண்டதில்லை. தேவமித்ராவிடம் எல்லாவற்றையும் கொட்டிவிடவேண்டும்போல் தோன்றியது. அவனுடன் பேசும்போது அந்நியனிடம் பேசுவதுபோல் இல்லை.
“கஷ்டம் என்று வந்தபோதுகூட நீங்கள் என்னிடம் வரவில்லையே. உங்களுக்கு உதவக்கூட எனக்குத் தகுதி இல்லை என்று நினைத்தீர்களா?” என்றான். அவன் முகத்தில் வேதனை தெரிந்தது.
“இல்லை, உங்களிடம் வர எனக்குத் தகுதியில்லை என்று நினைத்தேன்,” என்றுவிட்டு அவன் பதிலுக்கும் காத்திராமல் என் ஆசனத்துக்குத் திரும்பினேன். கடந்த ஒன்றரை வருடங்களில் எத்தனையோ தடவை அவனிடம் பேசவேண்டும், நான் செய்த தப்புக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும், என்னை மறுபடியும் ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சவேண்டும் என்று துடிக்கும் மனதை அடக்கிவைத்திருந்தேன். அவன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டால் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கில்லை என்று பயந்தேன். இப்போது என் முன்னால் இருக்கும் அவன் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்வானா? கேட்டுவிட இதயம் ஏங்கியது.
தகுதி 2
வேகமாக என் அலுவலக அறையை விட்டு வெளியேறும் அஷ்வினியை வேதனையுடன் பார்த்தேன். அவள் இப்போதும் தேவமித்ரா என்ற என் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுவைத்திருக்கிறாள் என்ற எண்ணம் ஒரு சிறிய எதிர்பார்ப்பைத் தூண்டியது.
எப்போதும் போல் அவள் கஷ்டங்களைத் துடைத்துவிட மனம் தவித்தது. சிறு குழந்தைகளாக இருக்கும்போதே அஷ்வினிக்கு ஒரு துன்பம் என்றால் நான் துடித்துவிடுவேன். பள்ளியில் யாராவது அவளை நோகடித்தால் அவர்களை ஒரு கை பார்த்துவிடுவேன். அஷ்வினியும் சளைத்தவளில்லை. என் வேதனைகளைத் துடைக்க அவள் கைகள் எப்போதும் தயாராக இருக்கும்.
சிறுவனாக இருக்கும்போதே அஷ்வினியைப் பாதுகாக்கும் கடமையை நானாகவே மனமுவந்து ஏற்றுக்கொண்டேன். அவளுக்குப் புரியாத பாடங்களை சொல்லிக்கொடுப்பதில் இருந்து அவள் சோகமாக இருக்கும்போது சிரிக்கவைப்பதுவரை எல்லாமே என் பொறுப்பென நினைத்தேன்.
அவள் வீடு என் இரண்டாம் வீடுபோலானது. அவள் பெற்றோரும் என் மறு பெற்றோரானார்கள். அஷ்வினி பூவாக மலர்ந்தபோது எங்கள் பாசம் காதலானது. எங்கள் குடும்பத்தவர்கள் எங்கள் பாசத்தை ஆதரித்தார்கள். நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது யாரும் ஆச்சரியப்படவில்லை. நாங்கள் ஒருவருக்கு மற்றவர் என்று எப்போதோ நிச்சயமாகிவிட்டது.
கதைகளிலும் காட்சிகளிலும் வருவதுபோல் திருமணத்தின்பின் என்றென்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு நீடூழி வாழ்ந்தார்கள் என்பது நிஜ வாழ்க்கையில் நடக்கவில்லை. எங்கள் பிரச்சனையும் திருமணத்தின் பின்தான் ஆரம்பமானது.
திருமணமானபின் அவளை மகாராணிபோல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். தனியாக வாழத்தொடங்கியதும் எங்கள் வித்தியாசங்கள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தன. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கும் பொன் தட்டில் உணவு உண்டு பென்ஸ் காரில் பயணிக்கும் அவளுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.
வீட்டில் புதிது புதிதாக விலையுயர்ந்த பொருட்கள் தோன்ற ஆரம்பித்தன. கேட்டால் அப்பா வாங்கிக் கொடுத்தார், நீங்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்பாள். உன் அப்பாவின் பணத்தில் நாங்கள் வாழவேண்டாம், அது எங்கள் குடும்ப வாழ்க்கைக்கு நல்லதில்லை என்றால் அவளுக்குக் கோபம் வரும்.
அப்பாவிடம் பணம் இருக்கிறது. அவருக்கு நான் ஒரே வாரிசு. அவர் கொடுப்பதில் என்ன தப்பு என்று விவாதம் செய்வாள். காலம் போனது. அவள் மாறவில்லை. என் சம்பாத்தியம் போதாது அதனால்தான் அப்பாவிடம் பணம் வாங்குகிறேன் என்று சொல்வாள். நமக்குள் ஊடலாக ஆரம்பித்தது ஒருவரை மற்றவர் நோகடிக்கும் யுத்தமாக மாறியது. பணத்தில் தொடங்கி எல்லா விஷயங்களிலுமே எதிர்ப்புத் தோன்ற ஆரம்பித்தது.
இறுதியாக அவள் பெற்றோர் தங்களுடன் வந்து வாழும்படி கேட்டபோது அதை நான் மறுத்ததால் நூலிழையில் தொங்கிய எங்கள் உறவு முழுவதாக அறுந்தது. உங்களுக்கு என்னுடன் வாழத் தகுதியில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றாள் அஷ்வினி. அவளைக் காப்பதே என் கடமையென வாழ்ந்த நான் மனமுடைந்துபோனேன்.
என்னை விட்டுப் பிரிந்ததால் அவள் மேல் கோபம் ஏற்பட்டபோதும், அஷ்வினியின் தகுதிக்கேற்ப அவளை வைத்துப் பார்க்க முடியாதவனாகிவிட்டனே என்று என்மேலும் வெறுப்பேற்பட்டது. அவளை மாற்ற முடியாது ஆனால் நான் அவள்மேல் வைத்திருந்த அன்பு என்னை மாற்றத் தூண்டியது.
இரவு பகல் பாராது கடுமையாக ஊழைத்து நான் மேலே வந்தபோது அவள் தந்தை அவர் வியாபாரம் முதல் அவர்கள் வீடுவரை எல்லாவற்றையும் இழந்துவிட்டார். நான் அஷ்வினியை சந்தித்து என்னை மறுபடியும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்க முயன்றபோது அவள் என்னுடன் பேசக்கூட மறுத்துவிட்டாள். என்மேல் அவளுக்கு வெறுப்பா இல்லை இந்த நிலையிலும் அவளைக் காக்க எனக்குத் தகுதியில்லை என்று ஒதுக்கினாளா என்று புரியாமல் நான் திகைத்தேன்.
அவள் தந்தை மாரடைப்பில் இறந்துவிட அஷ்வினி இங்கே வேலைபார்ப்பதை அறிந்து இந்தக் கம்பனியையே நான் வாங்கினேன். அவளை நெருங்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. இன்று அவள் தன்பெயரை அஷ்வினி தேவமித்ரா என்று போட்டிருப்பதைப் பார்த்து மனம் துள்ளியது. அவள் இப்போதும் என் சொந்தமாகத்தான் இருக்கிறாள். கஷ்டம் ஏற்பட்டபோது ஏன் என்னிடம் வரவில்லை என்றேன். தனக்குத் தகுதியில்லை என்றாள். நான் தகுதிபார்ப்பவன் இல்லை என்பதை அவள் ஏன் புரிந்துகொள்ளவில்லை?
மாலையில் வேலை முடிந்தபின் சாலையோரம் நடந்து செல்லும் அவளருகில் வண்டியை நிறுத்தினேன். “வாருங்கள் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன்,” என்றேன். சிறிது தயங்கியபோதும் மறுபேச்சின்றி வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
சிறிது நேர அமைதியின் பின், “என்னை மன்னித்துவிடுங்கள்,” என்றாள்.
“எதற்காக?” என்றேன் நான்.
“உங்களைக் கீழ்த்தரமாக நடத்தியதற்காக. பணம் இல்லாது வாழ்க்கையில்லை என்று ஒரு காலத்தில் நினைத்தேன். அது எவ்வளவு தப்பு என்று இப்போது புரிகிறது. பணம் இன்றி சந்தோஷமாக வாழக் கற்றுக்கொண்டேன். அதை அப்போதே செய்யாததற்காக வருந்துகிறேன். உங்களிடம் இதைச் சொல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. உங்கள்மேல் இருந்த அன்பும் காதலும் மாறவில்லை. ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை இழந்துவிட்டேன். ஆனால் அதில் ஒரு இழப்புக்காகத்தான் இப்போதும் வருந்துகிறேன். அது நீங்கள்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,” என்றாள் அவள் மென்மையான குரலில்.
நான் வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினேன். “அஷ்வினி, உங்களை நான் என்றும் வெறுத்ததில்லை. நான் இவ்வளவுதூரம் மேலே வந்ததற்குக் காரணமே நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளும் தரத்திற்கு நான் வரவேண்டும் என்பதுதான். நான் என்றும் தகுதி பார்ப்பவன் இல்லை. நீங்கள் எப்போதும் என் மனதில் பொன்னால் செய்த பீடத்தில் அமர்ந்திருக்கும் மாகாராணிதான். ஒருமுறை சரி என்று சொல்லுங்கள். இடையில் எதுவுமே நடவாததுபோல் எங்கள் வாழ்க்கையைத் தொடரலாம்,” என்றேன்.
“நான் சரி என்றால் பணத்திற்காகத்தான் சம்மதிக்கிறேன் என்று நினைத்துவிடமாட்டீர்களா?” என்றாள் அவள்.
“நான் உங்களை நம்புகிறேன். நமக்குள் இருந்த பாசம் காலத்தால் அழியாதது என்பதையும் நான் நம்புகிறேன்,” என்றேன் புன்னகையுடன்.
“சம்மதம்,” என்றாள் அவள் மலர்ச்சியுடன்.