என்னைச் சுற்றி எங்குமே இருட்டு. தலையை நன்றாக நிமிர்த்திப் பார்த்தபோது தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. குழிக்குள் இருந்து வெளியே வர எடுத்த முயற்சிகள் எல்லாம் தோற்றுவிட நான் நம்பிக்கை இழந்து தரையில் அமர்ந்தேன். என்னால் தனியாக மீள முடியாது என்று புரிந்தது. யாராவது கைகொடுத்துத் தூக்கிவிட மாட்டார்களா என்ற ஆற்றாமை ஏற்பட்டது. கண்களில் இருந்து மடை திறந்த ஆறுபோல் கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.
நான் பள்ளத்தில் இருப்பது தெரியாமல் வெளியே உலகம் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தது. உதவிக்கு யாரையாவது அழைக்க மனம் ஏங்கியது ஆனால் அவர்களால் காணமுடியாத இந்தக் குழிக்கு எப்படி வழிகாட்டுவது என்று புரியவில்லை. நான் முயலாவிட்டால் இங்கேயே என் வாழ்வு முடிந்துவிடும் என்றபோது மனதில் அச்சம் எழுந்து கதறலாக அது வெளியே வந்தது.
இறுதியில் என் அவலக்குரல் யாரையோ எட்டிவிட ஒரு கரம் என்னை நோக்கி நீண்டது. அது யார் என்று நான் கவலைப்படவில்லை. அந்தக் கரத்தைப் பற்றுவது சரியா என்று நான் விவாதிக்கவில்லை. மெதுவாக மேலே ஏறினேன். பலநாட்களின் பின் ஒளியில் குளித்தேன்.
அந்தக் கரத்திடம் நான் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன் பல கரங்கள் எனக்கு உதவின. என்னை ஆழ்ந்த குழியிலிருந்து மேலே கொண்டுவந்தன. என்னால் குழியின் விளிம்பில்தான் நிற்கமுடியுமே தவிர அதை விட்டு விலகமுடியாது. ஒரு சமநிலையில் அதன் விளிம்பைச் சுற்றி வலம் வர மட்டுமே முடியும். உள்ளத்தின் உணர்ச்சிகள் கொஞ்சம் வேகமான காற்றுப்போல் அடித்தால்கூட மறுபடியும் பள்ளத்தில் விழுந்துவிடுவேன்.
ஏன் நான் விலக மறுக்கிறேன் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிற்றினால் நான் அதனுடன் கட்டப்பட்டிருப்பதை அவர்களால் உணர முடியவில்லை. என்னை அதன் விளிம்பில் இருந்து தூர இழுக்கமுயன்று தோற்றுப்போய் அவர்கள் கைவிட்டுப் போனார்கள். நான் ஏமாற்றத்துடன் மறுபடியும் குழியில் விழுந்தேன். காலம் கற்றுத் தந்த பாடம் இந்தக் கரத்திடம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்றது.
அவன் என்னை இழுத்துச் செல்ல முயலவில்லை. அவன் விரல்களை என்னுடையதுடன் கோர்த்துக்கொண்டு என்னைப் பார்த்து முறுவலித்தான். “பயப்பட வேண்டாம். நீங்கள் உள்ளே விழுந்தால் தூக்கிவிட எப்போதும் தயாராக இருப்பேன்,” என்றான். எனக்கு மறுபடியும் நம்பிக்கை தோன்றியது.